அன்னையின் அருள்

12 Apr 2010
Posted by ச. செந்தில் குமரன்
அன்னைமீர்! நின்னருள் கண்டேன் - அதை
அனைவரும் உணர்ந்திட ஆசைகள் கொண்டேன்
வெற்றி கிடைத்தது பாரு - அந்த
வெண்ணிலா ஒளிர்வுக்கு ஈடொன்று உண்டோ?

கண்பெற்ற பயனின்று கண்டேன் - மேலும்
கவிபாடும் திறனினை அன்னையால் பெற்றேன்!
கவிஎழுதும் திறனொன்று போதும் - இந்த
கலியினில் அன்னையின் புகழினைச் சொல்வேன்!


ஆதவன் கதிர்களின் முன்னே - அந்த
அகல பனிமலை கறைவது போலே,
வேத குரிசிலே நின்னை - நான்
வேண்டிய பொழுதினில் பாவங்கள் சாமோ?

வீணர்கள் வாழ்கின்ற ஊரில் - அன்னை
வீழ்ச்சிகள் இல்லாமல் காத்திட கண்டேன்,
பாணர்கள் இசைகின்ற பண்ணில் - உள்ள
பரவசம் அன்னையை போற்றலில் பெற்றேன்!

அலைபாயும் மனதினை கொண்டேன் - அந்த
அல்லல்கள் தீர்ந்திட அன்னையை தொழுதேன்,
நிலைகொள்ள வழிஇல்லை எனினும் - அன்னை
நின்னருள் சேர்ந்திட்டு நிலைத்திட நினைத்தேன்!

*அன்னை - பராசக்தி
கடவுள் வாழ்த்து