ஏக்கங்கள் தீர்ப்பாய்!

12 Apr 2010
Posted by ச. செந்தில் குமரன்
மண்ணின் மைந்தா புவியில் நிலைப்பாயா?
மதங்கள் இல்லாத மானுடம் செய்வாயா?
கண்ணின் உறக்கம் கழற்றி எரிவாயா?
வித விதமான வேற்றுமை கலைவாயா?
விழுப்புண் ஏந்திய வீரன் ஆவாயா?
விந்தைகள் செய்து வியக்க வைப்பாயா?
புழுமின் புரளும் கடல்களை காப்பாயா?
புகைப்பதை இன்றுடன் புறக்கணித்து விடுவாயா?

கலகம் இல்லாமல் கவனங்கள் ஈர்ப்பாயா?
கடன்கள் இல்லாமல் கன்னியம் புரிவாயா?
உலகம் உணர உயர்ந்து எழுவாயா?
உன்னை உலகம் அரிய நடப்பாயா?
அறிவை வளர்க்க ஆசை கொள்வாயா?
அழிவை எதிர்க்க அறிவை வளர்ப்பாயா?
வெறியோடு வேலை, செய்து முடிப்பாயா?
வெல்லம் வரினும் எதிர்த்து நிற்பாயா?

காதல் புரிந்து கனவுகள் மறப்பாயா?
கனவை நிகழ்த்தி காதலில் ஜெயிப்பாயா?
மோதல் வரினும் மெளனம் காப்பாயா?
மோகம் கொண்டு மோதலில் குதிப்பாயா?
தாய் திருநாட்டை காக்க முனைவாயா?
தாகக் கனலை தீர்த்து வைப்பாயா?
வாய் வரைபேசி வாதம் புரிவாயா?
வாதத்தை நிகழ்த்தி வெற்றி பெறுவாயா?

ஜாதி இல்லாமல் சமத்துவம் செய்வாயா?
ஜாதகம் பார்க்கும் பழக்கம் துறப்பாயா?
பீதிகள் இல்லா சமூகம் படைப்பாயா?
பிம்பத்தில் மோகம் கொண்டு புதைவாயா?
பூமிப் பந்தின் இரகசியம் களைவாயா?
பூக்களின் மணத்தினை நாளை நுகர்வாயா?
தேமித் தேமி அழுவதை வெறுப்பாயா?
தேன்சுவை தமிழ்தனை என்றும் நினைப்பாயா?

சரித்திரம் நிலைக்க சாதனை படைப்பாயா?
சகதியில் சிக்கி சலக்குடன் சாவாயா?
பேரிடி ஆயினும் பதறாமல் இருப்பாயா?
பேதங்கள் தவிர்த்து பாரினில் நிலைப்பாயா?
தீமைகள் குறைக்க தீர்ப்பு கொடுப்பாயா?
தீந்தமிழ் பாட்டினில் மனதை தொலைப்பாயா?
இமைகள் பேசிடும் மொழிகள் உணர்வாயா?
இருட்டினில் கூட ஒழுக்கம் சுமப்பாயா?