புகைத்தல்

12 Apr 2010
Posted by ச. செந்தில் குமரன்
மசோதா வருகுது! மனிதனை திருத்த!
மாசுகள் இனி மண்ணில் குறைக்க,
மனிதன் ரெயிலென புகைத்ததை நிறுத்தி,
மாசுகள் குறைத்திட மசோதா வருகுது!

பொதுஇடங்களில் புகைக்க கூடாதாம் - நற்
சிந்தனை உடையோர் சீறி எழுந்தனர்,
புகையின் புகழினை குறைக்கவே இவ்வழி
சீரி(றி)ய சிந்தனையாளர் சிறந்து வாழிய!

தழும்புகள் பலவும் உதட்டில் தாங்கினர்,
தாங்கிய தழும்புகள் எதனால் வந்தன?
விழுப்புண் என்றதை இயம்புதல் தீது,
இழுப்புண் என்றொரு வார்த்தை தகுமோ?

மூன்று இன்ச்சினில் நிம்மதி வருகுதாம்,
இன்பமாய் புகைக்க சாக்குகள் கூறினர்;
மூடனே! இன்பநிம்மதி வராதடா - காலனின்
முடிவுரை கணக்கில் மூன்றுநிமிடங்கள் குறையுமடா!

பூப்பறிக்க தெரியாத கைகள் - இன்று
புகைக்கோல் பிடிக்க கற்ற தெங்கோ?
யாப்பின் வகைகள் போல - இன்று
யாவரின் கையிலும் பலவகை புகைக்கோல்!

வட்ட வட்டமாய் புகையினை கக்கி,
வாழ்க்கை வட்டத்தினை கறைப்பது ஏனோ?
காட்டுத் தீபோல் பரவிய பழக்கமின்று
காற்று மண்டலத்தை கெடுப்பது சுகமோ?

புவியில் சுவைக்க இன்பங்கள் பலஉண்டு
புகைப்பது மட்டுமே அதனின் வழியன்று!
பக்கத்தில் இருப்பவனுக்கு பாதகம் செய்வதால்
பாவிகள் அல்லரோ புகைப்பவர் யாவரும்?

துயர்தரும் புகையினை துறத்தி அடிப்போம்
தேக(ச)த்தில் இனியேனும் புற்றுகள் தவிர்ப்போம்
செயலினில் இதனை செய்து காட்டுவோம்
செம்மையாக வாழ அடிக்கல் நாட்டுவோம்!